×

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேர் கைது: 3 செல்போன், கத்தி பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை கட்டுப்படுத்த மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை குறித்து மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவிக்குமாறு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 100 இடங்களுக்கும் மேலாக விழிப்புணர்வு பேனர்கள் வைத்திருந்தனர்.

இதனையடுத்து மாவட்டத்த்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதன்படி திருவள்ளூர் பெரியகுப்பத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருவள்ளூர் டவுன் சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் அருகே சந்தேகப்படும்படியாக இருந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் 3 பேரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் ஜவஹர் நகர் ராகவேந்திரா தெருவைச் சேர்ந்த தாமோதரன் மகன் அரவிந்தன்(31), பூங்கா நகர், சக்தி தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் அபினேஷ்(21), மற்றும் சேலை காலனி பகுதியைச் சேர்ந்த வில்சன் மகன் பிராட்ரிக் சாமுவேல்(23) என்பதும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த டவுன் சப் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் ஜவஹர் நகரில் உள்ள அரவிந்தன் வீட்டில் சோதனை செய்து 102 போதை மாத்திரைகள், கஞ்சா 1.5 கிலோ, 3 செல்போன், கத்தி, சிறிய எடைமெஷின் பிளாஸ்டிக் கவர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் திருவள்ளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்ததையடுத்து அரவிந்தன், அபினேஷ், பிராட்ரிக் சாமுவேல் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேர் கைது: 3 செல்போன், கத்தி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,SP ,Srinivasa Perumal ,Dinakaran ,
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...